Saturday, December 29, 2007

கலித்துறை

வயலு ளாடிடுங் கதிர்மணிச் செறிவினை வளைக்குங்
கயலு லாவிடும் மடைகளைக் குருகுகள் கலைக்கு
மியலு லாவிடுந் தமிழ்நில மாந்தரை இழக்கும்
புயலு லாவுத லழகென விருப்பதும் புகழா!

Wednesday, December 19, 2007

பாரதியின் 125 ஆவது பிறந்த நாள் விழா

நண்பா!... நின் புகழ் வாழ்க!
(பன்னிரு சீர் விருத்தம்)

தென்னவர் வாழ்வே செந்தமிழ் விளக்கே
திருவாய் வாழ்பவரே
தென்றலில் புயலே சிந்திசைக் குயிலே
திருவே பாரதியே!

கன்னலின் சாறே மின்னலின் வீச்சே
கருவாய் பிறந்தவனே
கற்றவர் வாழ்வே பெற்றவர் பயனே
கதிராய் வாழ்ந்தவரே!

இன்னலின் தீர்வே நன்னெறி வீறே
எளியர் வாழ்விடங்கள்
எங்கென நாடி பொங்கிடப் பாடி
இருக்கும் புகழுருவே!

அன்னையர் காப்பே நன்னய விளக்கே
அணையா மணிச்சுடரே
அன்பிது வென்றே பண்பது காட்டும்
அளியே வாழியவே!

Tuesday, November 13, 2007

என்னைப் பற்றி...

நாமக்கல் மாவட்டம் மணப்பள்ளி என்னும் சிற்றூரின் பெருநிலக்கிழார் திரு. இராமசாமி முதலியார் அவர்களின் தலைமகன் ஆசிரியர் இராம.சிவசுப்பிரமணியம்; புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனார் அவர்களின் மூன்றாம் மகள் இரமணி இணையரின் மூத்த மகள்.